இதுதான் பக்தி!

கேரள மாநிலம் குருவாயூரில் வசித்த நாராயணபட்டாத்ரி என்பவர் பெருமாளின் தீவிர பக்தர்.
பெருமாள் குறித்து 'நாராயணீயம்' என்னும் நூலை எழுதியவர்.
நாராயண பட்டாத்ரியின் பெருமைகளைக் கேட்ட குட்டப்பன் என்னும் பக்தன் அவரிடம் சீடனாகப் பணியாற்ற விரும்பி அவரைச் சந்தித்தான்.
அவனைக் கண்ட நாராயணர், “என்னப்பா வேண்டும்?” என்றார். குட்டப்பன் பணிவாக, “சுவாமி நான் தங்களுக்குச் சேவை செய்ய ஆர்வத்துடன் இருக்கிறேன். என்னை சீடனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்..” என்றான்.
“அப்படியா.. நீ என்ன படித்திருக்கிறாய்..” என்றார் நாராயணர். தான் படிக்கவில்லை என்றான் வந்தவன். “கல்வியறிவில்லாதவன் எனக்கு சீடனாக இருக்க முடியாது. எனவே, சமையற்கட்டில் உதவியாக வேலை செய்..” என்று சொல்லிவிட்டார் நாராயணர்.
எந்த வகையிலாவது குருவிற்கு சேவை செய்யும் பாக்கியம் கிடைத்ததே என மகிழ்ந்து சமையற்கட்டு வேலைகளை கவனித்தான் குட்டப்பன்.
ஒரு நாள் அவன் நாராயணரிடம், “குருவாயூரப்பன் எப்படியிருப்பார்..” எனக் கேட்டான். அவர் எரிச்சலுடன், “எருமை வடிவில் இருப்பார்..” என்று சொல்லிவிட்டார்.
குரு சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பிய சீடன் குருவாயூரப்பனை எருமையாகவே பாவித்து வணங்க ஆரம்பித்துவிட்டான்.
ஒரு முறை நாராயண பட்டாத்ரி கோவிலுக்குச் சென்றபோது தானும் உடன் வருவதாகச் சொல்லி சென்றான் குட்டப்பான்.
அப்போது உற்சவரை வீதியுலா கொண்டு செல்வதற்காக சன்னதிக்குள் இருந்து வெளியே கொண்டு வர முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. அங்கிருந்தவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
அப்போது குட்டப்பன் நாராயணரிடம், “சுவாமியின் கொம்பு இடிக்கிறது. அதனால்தான் வெளியே கொண்டு வர முடியவில்லை” என்றான்.
அதிர்ந்து போன நாராயணர், கருவறையின் உள்ளே கவனித்தபோது சுவாமி எருமை வடிவில் காட்சி தந்தார்.
தவறை உணர்ந்த நாராயணர் இறைவனுக்கு கல்வி, ஜாதி, தகுதி என எந்தப் பேதமுமில்லை என்பதைப் புரிந்து கொண்டு தனது சீடனின் பாதத்தில் வீழ்ந்து வணங்கினார்.